==================================
'உலக மனிதநேய தினம்'  (ஆகஸ்ட்  19) கொண்டாடும் இச்சமயத்தில், 
நமது தமிழகக் குறுஞ்செய்திக் குடும்பத்தில்  (MOBILE SMS) தமது 
கவியாற்றலைக் காட்டிவரும் என் அன்புக் கவிஞர்களின் கவிதைகளை 
இத்தளத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
- கிரிஜாமணாளன்
=====================================================
நட்பில் மலரும் மனிதநேயம்!
சாதிமத பேதத்தின் சமாதிமீது
சமத்துவமாம்  ரோசாவை  நட்டுவைப்போம்;
வேதியர்க்கும்  விலங்குகட்கும்  உயிரொன்றென்றெ
வித்தியாசமின்றிங்கே  அன்பு  செய்வோம்!
ஏதிலார்தம்  குற்றங்கள்  கண்டிடாமல்
எல்லோரும்  ஒன்றெனவே  உணர்ந்துநிற்போம்!
நாதியிலா  உயிர்க்கெல்லாம்  நன்மை  செய்தால்
நட்பதனில்  மலர்ந்திடுமே  மனிதநேயம்!
பிறந்திட்ட குழந்தைக்குச் சாதியுண்டோ?
பேர்உண்டோ?  மதமும்தான் உண்டோ நண்பா?
பறக்கின்ற பறவைக்குள்  பேதமுண்டோ?
படைத்திட்டார்  பேதமெல்லாம்  மனிதர்தம்மும்
துறந்திட்ட  வெறுப்புடனே  துவேடம்நீங்கி
தூய்மையுடன்  மனந்தன்னில்  கருணை  ஓங்க
அறத்துடனே  நல்லன்பை  வளர்த்து  விட்டால்
அந்நட்பில்  மலரும்தான்  மனிதநேயம்!
- கே.பி.பத்மநாபன்.
(கீழைநாட்டுக் கவிதைமஞ்சரி நூலிலிருந்து)
====================================================================================================
மண்ணுக்குள்  மனிதநேயம்!
உண்ணமறுக்கும்குழந்தை
ஊட்டமுயலும் தாய்
எதிரிலோ பிச்சைக்காரச் சிறுமி.
"போ!" – அம்மாவின் விரட்டல்!
மண்ணுக்குள்  புதைகிறது
மனிதநேயம்!
பேருந்தில்  நெரிசல்
கைப்பிடியில்  தொங்கும்
கர்ப்பிணிப்  பெண்
இடம்கொடுக்கமாட்டார்களா
என  எங்கும் பார்வை…..
ஊனமுற்றோர்  இருக்கையில்
ஒரு "குடிமகன்"…..
மண்ணுக்குள்புதைகிறது
மனிதநேயம்!
மதத்தின்  பெயரால்
செல்வத்தின்  பெயரால்
மண்ணின்  பெயரால்
மென்மையான  காதலின்
பெயராலும்கூட…….
மண்ணுக்குள்  புதைகிறது
மனிதநேயம்!
சுயநலத்திற்காக!
- கவிஞர்  அம்பல்மாதவி,  தஞ்சாவூர்
தமிழ்நாடு
======================================================================================================================
மனிதநேயமே  என்றும்  பிரதானம்!
புவியொரு  மைதானம்,
இதில்  இன்றும்
நிதிதானம்
நிலைதானம்
கல்விதானம்
கோதானம்
கந்தானம்
அன்னதானம்
மண்தானம்
உதிரதானம்
உடலுறுப்புதானம்…..
எனினும்,
மனிதநேயமே
என்றும்  பிரதானம்!
- கவிதாயினி  வஞ்சி,  நெல்லை,  தமிழ்நாடு
======================================================================================================================
நிலைக்கும் மனிதநேயம்!
மதுவில்  மயங்கி
மாய்ந்து  கொண்டிருக்கும்
உயிர்களை  மீட்க  - தன்
உயிரினை  ஈந்த
சசிபெருமாள்  போன்ற
சரித்திரநாயகர்களின்
தியாகம்  உள்ளவரையிலும்,
விபத்தில்  அடிபட்டு
விபரீத  மூளைச்சாவு  அடைந்த
அன்பு  நெஞ்சத்தின்
உடலுறுப்புகளை  தானம்செய்து,
இன்னொரு  உயிரை  வாழவைக்கும்
இரக்கமுள்ள  நெஞ்சங்கள்  வாழும்  வரையிலும்,
மனிதநேயம்  இம்மண்ணில்
என்றென்றும்
மாண்புடன்  நிலைத்திடுமே!
- கவிதாயினி  வஞ்சி,  நெல்லை, தமிழ்நாடு.
======================================================================================================================
அன்று….
வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம்
வாடிய வள்ளலார்,
முல்லைக்குத் தேர்ஈந்த
வள்ளல்பாரி,
மயிலுக்குப் போர்வைதந்த
மன்னன் பேகன்,
அன்பின் முகவரியான
அன்னை தெரஸா.
தன்னையே தந்த பூமி!
இன்று…
பாலியல் பலாத்காரம்,
'பாம்'  வெடிக்கும் கலாச்சாரம்,
மதுவில் மயங்கி
மகளையேச்  சீரழிக்கும்
மாக்கள்,
முதியோரை  விடுதியே
கதியாய்எண்ணி
விரட்டிடும்  சதிபதிகள்!
எங்கே போனது  மனிதநேயம்?
சங்கு ஊதி  சமாதியானதோ?
- கவிதாயினி  வஞ்சி,  நெல்லை,   தமிழ்நாடு.
===========================================================
===========================================================
மணம்  வீசட்டும்  மனிதநேயம்!
மனிதநேயம்  என்பது  மானிடப்பிறவிக்கு
இனிதே வேண்டிய ஒன்று!
துன்பத்தில் உழல்வோர்க்குத்
துள்ளிக்குதித்துச் செயல்பட்டு
உதவவேண்டும்!
கவலையில் மிதப்போர்க்கு
கனிவோடு ஆறுதல்
கூறவேண்டும்!
மற்றவர்களும்
மனிதர்களே  என்ற
மனவுணர்வு  நமக்குவேண்டும்!
நிதானம்  தவறுவோர்க்கு
நேயமுடன்
நித்தமும்  அறிவுறை  கூறவேண்டும்!
மலரவேண்டும்  மனதில்
மனிதநேயம்  என்றென்றும்!
- கவிதாயினி.  ஜமீலாபேகம்,  உதகை,, தமிழ்நாடு
====================================================================================================================
மனிதநேயம்!
பசியால்  பரிதவித்து  வாடும்
பரம  ஏழைகளுக்கு உதவும்
பண்பு நமக்கு  வேண்டும்!
கண்ணீர்  வடிப்போரைக்  கண்டு
கரையும் மனதினராய் - அவர்
கவலை  போக்கும்
பண்பு நமக்கு வேண்டும்!
வறுமையில் வாடும்  மனிதர்களுக்கு
அவர்களின்  வறுமைதீர
வழிகாட்ட வேண்டும்!
உயிர்போகும் நிலையில்
உள்ளவர்களுக்கு  உதவும்
உத்தமகுணம் வேண்டும்!
எளியோர்க்குத்  தீங்கிழைக்கும்
கொடியவர்களை
எதிர்த்து நின்று போராடுவதில்
கொதித்தெழும்  உணர்வுவேண்டும்!
வீழ்ந்தவன் வீழ்ந்தே கிடக்காமல்
அவன் விழித்தெழ உதவும்
வீரம் வேண்டும்!
இந்தியர்கள்  அனைவருக்கும்
இப்பண்புகள் மலர்ந்தால்,
இன்னொரு  இமயமாக உயரும்
இனிதே மனிதநேயம்!
- கவிஞர்.  மூர்த்திதாசன், தேனி,  தமிழ்நாடு
============================
மனிதநேயம்  கொள்வோம்!
----------------------------------------
போற்றுதலுக்குரிய   தன்னம்பிக்கை,
புரிதலோடு  கூடியவாழ்க்கை,
தேற்றிக்கொள்ளும் மனத்தெளிவு,
தீர்க்கமான குறிக்கோள்கள்,
ஆற்றிவரும் அரியசாதனைகள்,
அத்தனையும் தம்முள்கொண்ட.....
“மாற்றுத்திறனாளி”களால்தான் இந்த
மனிதகுலமே வாழ்கிறது!
மனிதநேயம் கொள்வோம்
மாற்றுத்திறனாளி தோழர்கள்மீது!
-         கிரிஜாமணாளன், திருச்சி. (தமிழ்நாடு)
===============================
மனிதம்!
அந்த "மனித"த்தன்மை பற்றி, எழுத்தாளர் அமரர் வல்லிக்கண்ணன்  அவர்கள்  குறிப்பிட்டுள்ளதை இங்கே  வாசிக்கலாமே!
கேள்வி;  தி.க.சி, அவர்களை ஒரு  'தபால்கார்டு  இலக்கியவாதி'  என்று கிண்டல் செய்பவர்களுக்குத்  தாங்கள் கூறும் பதில் என்ன?
வல்லிக்கண்ணன் பதில்:
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்! ஒரு தபால்கார்டு மூலம் அறிவு விழிப்பையும், சிந்தனைத்தெளிவையும், சமூகப்பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வையும், செயலூக்கத்தையும், உழைக்கும் உற்சாகத்தையும் பரப்பமுடியாவிட்டாலும், அதைப் பரிகசிக்காமல் இருப்பதே  "மனிதம்"  ஆகும்.
(நன்றி:  "யாதும்ஊரே" (மார்ச் 2006) இதழ்)
=====================================
======================================
மனிதநேயம்
============
மறைந்துவரும்  மனிதப்பண்புகளை
மனதிற்கு நினைவூட்டி
தொலைந்து நிற்கும் தூயஎண்ணங்களை
துளிர்க்கச் செய்வதற்காக
மனிதநேயத் திருநாளாய்
மலர்ந்து நிற்கும்
புனித நாளாம் இந்நாளில்
பூரிப்புகொள்வோமாக1
- கிரிஜாமணாளன், திருச்சி
                                    தமிழ்நாடு
=============================





