Tuesday, September 30, 2008

உயிர் தந்த சாமிகள்!


உயிர் தந்த சாமிகள்
சிறைவைக்கப்பட்டனர்
முதியோர் கோவிலில்!

- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

உன் கண்கள்!


உன் கண்கள்
உளியென்று நான்
கண்டுகொண்ட பிறகு,
என் இதயம் கல்லாய்
இருப்பதைப்பற்றி
கவலையில்லை எனக்கு.

- சரவணன் ராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.


அழித்துப் பார்த்தேன்
அழியவில்லை.
உழைத்துப் பார்த்தேன்
அழிந்துபோனது...
வறுமைக்கோடு!

- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை.

Sunday, September 28, 2008

அவள் பார்வை!


அறிமுகத்தை அழிப்பதற்குத்
தயாராகிவிட்டேன்
வாளேந்திய துணிவோடு நான்.
இன்னும் வெட்ட வெட்ட
வீழாத நினைவுகளாய்
அவள் பார்வை!

- சந்தோஷ்குமார் (9944758391)
புதுவை

Friday, September 26, 2008

பௌர்ணமி!


அமாவாசை இருளில்
ஆயிரம் பௌர்ணமிகள்..
அவள் வருகை.

- ஜோதி கார்த்திக்
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)
திருச்சிராப்பள்ளி.

நந்தியின் பார்வை!


தோஷம் கழிய நந்திவலம்,
நந்தியின் பார்வை
சிலைமீது மட்டும்.

- எம்.எஸ்.குமரன் (9865850773)
வளவனூர்.

Thursday, September 25, 2008

வாழ்வு என்பது.......


ஏதோ ஒன்றிற்காக வாழ
ஆசைப்பட்டு.....ஆசைப்பட்டு
ஏதோ ஒன்றிற்காக
துக்கப்பட்டு.....துக்கப்பட்டு
வாழாமல் முடிந்தன
பல வாழ்வுகள்.

- கவிதாயினி மஞ்சுளா
மதுரை

கொக்கு!



இலக்கை அடையும் முயற்சியில்
ஒரே இடத்தில் நிற்கிறது
ஒற்றைக்கால் கொக்கு.
எல்லா இடங்களிலும்
வழுக்கி விழுகிறான்,
இரண்டு காலில் நிற்கும்
மனிதன்!

- கவிஞர் ஆங்கரை பைரவி (9842633785)
இலால்குடி, திருச்சி மாவட்டம்

Wednesday, September 24, 2008

வாழ்க்கை!



தொடர்கதையாய்
வேலையற்ற இளைஞன்,
விடுகதையாய்
முதிர்கன்னி,
சிறுகதையாய் மனிதன்...
வாழ்க்கை!

- கவிஞர் அ. கௌதமன்
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)
திருச்சி 620020

நினைவின் ஜனனம்!



நம் இதழ்கள் இணைந்து
பிரசவித்தது
மௌனக்குழந்தையை.
உன் அணைப்பின் சுகத்தில்
அடைகாத்துக் கொண்டேன்
பொரிக்கப்போகும்
நினைவுக் குஞ்சுகளுக்காக.

- கவிஞர் யாழி, கோவை.
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)

அரிதாகிவரும் மனிதநேயம்!



அடுக்குமாடிக் குடியிருப்புகள்
அண்டை வீட்டாரோடு வெறுப்புகள்
துக்க விசாரிப்புகளுக்கும்
தொலைபேசியில் அனுதாபங்கள்.
தொலைந்துபோனது மனிதநேயம்!

- கவிஞர் அ. கௌதமன் (9994368626)
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்)
திருச்சி 620020

Tuesday, September 23, 2008

கூவும் சேவல்!


ஊமையாய்ப் பிறந்தாலும்
விடியலைச் கொடுத்தேன்,
ஊருக்கே என்னை
விருந்து வைக்கிறான் மனிதன்...
கூவிய சேவல்.

- எம்.எஸ்.பாபு
('வானவில் சிகரங்கள்'மன்றம்)
திருச்சி.

Monday, September 22, 2008


மகாத்மா நமக்களித்த புத்தகம்
மறந்துவிட்டோம் அதைத் திறக்க..
'மனிதநேயம்'!

- எம்.எஸ். கோவிந்தராஜன்
ஆசிரியர்/"தாழம்பூ"
சுப்பிரமணியபுரம், புதுக்கோட்டை மாவட்டம்

Sunday, September 21, 2008

மனமில்லை!


உறங்க மனமில்லை...
நினைவில் நீ!
விழிக்க மனமில்லை...
கனவில் நீ!

- சி. கலைவாணி
அரியூர், வேலூர் மாவட்டம்.

திருப்பம்!


நீ
காலார நடந்துபோகும்
சாயங்கால வேளைகளில்
உன் கால்கள் திசைமாறுகையில்
திரும்பிக்கொள்கின்றன
சூரியகாந்திப் பூக்களும்!

-த. சுரேஷ் ராஜன்
லால்குடி, திருச்சி மாவட்டம்.


இருவருக்கு ஜனனம்
ஒருவரின் மரணத்தில்...
கண் தானம்.

- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை.

Friday, September 19, 2008

நினைவுகள்!


மலர்ந்தவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன உன்னை
உதிர்ந்தவையெல்லாம்
நினைவுபடுத்துகின்றன
நம் காதலை!

- பி. ஜெயக்குமார் (9842639779)
அந்தியூர்.

Thursday, September 18, 2008

தீண்டாமை!


"தீண்டாமை"
தீண்டித்தான் வந்தது,
இரு உதடுகளை.

- தே. ரம்யா
கொட்டக்குளம்,திருவண்ணாமலை.

பிடிக்கும்!


நீ சிரித்துப்பார்! உன் முகம்
உனக்குப் பிடிக்கும்!
மற்றவர்களை
சிரிக்கவைத்துப்பார்! உன் முகம்
எல்லோருக்கும் பிடிக்கும்!

- எம். செல்வகுமார், பாடி புதுநகர்.
("வானவில் சிகரங்கள்")

தண்டனை!

மிதியடிகொண்டு பூமித்தாயை
மிதித்ததால் மண்ணுக்குள் சிறை...
மரணம்!

- எம்.எஸ்.பாபு (9976546735)
("வானவில் சிகரங்கள்", திருச்சி)

கலக்கம்!


காய்க்காத மரத்தையும்
காய்க்கவைத்தவன்
கலங்கி நிற்கிறான்,
மலடியாகிய தன்
மனைவியை எண்ணி.

- கொள்ளிடம் காமராஜ்
பிச்சாண்டார்கோவில், திருச்சி.

மனிதநேயம்?



பசியோடு இரந்தவனை
விரட்டிவிட்டு
விருந்தினர்களுக்காகக்
காத்திருக்கிறார்கள்
வாசல் பார்த்து.
காகம் கரைந்ததாம்!

- கவிஞர் யாழி, கோவை
(உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்-
திருச்சி மாவட்டக்கிளை)

வணக்கம்!


அலைபேசி வாயிலாக அனுதினமும் கவிதைகளை வழங்கி அன்புள்ளங்களைக் கவர்ந்துவரும் என் அருமைக் கவிஞர்களே! அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்!

தன்னுள் ஊற்றெடுக்கும் கற்பனைகளை, கவியாற்றலை இதழ்களிலோ, கவியரங்கங்களிலோ அரங்கேற்ற வாய்ப்புகள் கிடைக்காத இளங்கவிஞர்களுக்கு இக்கால அலைபேசி ஊடகம் ஓர் வரப்பிரசாதமாக, சங்கப்பலகையாக அமைந்துள்ளது.

நாள்தோறும் என் அலைபேசியை வந்தடையும் எண்ணற்ற கவிதைகளைப் படிக்கும்போது, இத்தனை திறமையுள்ள இளங்கவிஞர்கள் அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கின்றார்களே என்ற இரக்கம் மேலிட்டதுண்டு. அதன் விளைவே, நான் உங்களுக்காக, உங்கள் படைப்புக்களை உலகறியச் செய்வதற்காகத் துவங்கியுள்ள வலைத்தளம் இது.

நீங்கள் தினமும் அனுப்பும் கவிதைகள்/குறும்பாக்கள் ஆகியவற்றை இத்தளத்தில் பிரசுரித்து உங்களை மகிழ்விப்பதே எனது நோக்கம்.

உங்கள் நல்ல படைப்புகளை நாடறிய, உலகறியச் செய்யவிருக்கும் என் முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள்.

வாழ்த்துக்களுடன்,

கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சிராப்பள்ளி 620021
(தொடர்புக்கு: 9940966667)

எனது பிற வலைத்தளங்கள்:

கவிதைகள்:
www.tiruchikavignarkal.tamilblogs.com
www.kavithaigal.tamilblogs.com

நகைச்சுவை:
www.girijamanaalan-humour.blogspot.com
www.girijanandha-humour.blogspot.com
www.humour-garden.blogspot.com