Wednesday, March 30, 2016

முந்தியெழு!

(உலகத்தாய்மொழி  நாளன்று, திருச்சியில்  நிகழ்ந்த பைந்தமிழ் இயக்கவிழாவில், வழங்கப்பட்ட கவிதை)

வண்டமிழை ஏற்றிருந்தாய்,
வளஞ்சிறக்க வாழ்ந்திருந்தாய்...
கண்டவர்பின்  சென்றதனால்
காலிடறி  வீழ்ந்திட்டாய்!
களம்காண  முந்தியெழு!
கால்கோளை  இன்று நடு!

கொஞ்சுதமிழ்  உண்டிருந்தாய்
குறள்நெறியைக்  கொண்டிருந்தாய்,
வஞ்சகரால்  வாழ்விழந்து
வழிமாறிச்  செல்கின்றாய்!
வலையறுக்க  முந்தியெழு!
வளவாழ்வைப்  பந்தலிடு!

மாத்தமிழைக்  கற்றிருந்தாய்,
மனைமாட்சி  பெற்றிருந்தாய்.
தீத்திறத்தார்  கூட்டுறவால்
திருவிழந்தே  உருவிழந்தாய்!
தேரோட்ட  முந்தியெழு!
தெருவெல்லாம்  கோலமிடு!

முத்தமிழைக்  கொண்டிருந்தாய்,
முனைமுகத்தில்  நின்றிருந்தாய்,
வித்தென்று  சோடைகளை
விதைத்தின்று  கவல்கின்றாய்!
விதைவிதைக்க  முந்தியெழு!
விளைநிலத்தைச்  செப்பனிடு!

- கவிஞர்  கொட்டப்பட்டு  சக்திவேலன்
திருச்சி
==============================




































































No comments: