Thursday, April 7, 2016
Monday, April 4, 2016
கண்ணீரில் விழுந்த
இதயம்!
.
நெஞ்சு
நிறைய
கண்ணீரைக்
கொட்டிவிட்டுச்
சென்றுவிட்டாய்!
மூச்சுவிட
முடியாமல்
மூழ்கிக்
கிடக்கிறது இதயம்.
நீரில்
விழும் எல்லாமும்
எடை
இழக்கும் என்பார்கள்
உன்
கண்ணீரில் விழுந்த
என்
இதயம் மட்டுமே
கனமாய்க்
கனக்கிறது!
==============================================
நீயே
என் காதலி!
உன்
உள்ளத்தைத்
தொடவரும்
ஒவ்வொரு முறையுமே
உன்
பாதங்களைத் தொடமுடியாத
பாவப்பட்ட
அலைகளாய்
நான்
திருப்பி அனுப்பப்படுகிறேன்
எனினும்
என்
காதலை நிராகரிக்கும்
நீயே
என் காதலி!
=============================================
- கவிஞர் புகாரி, கனடா
('காதலிக்கிறேன்
உன்னை எப்போதும்...' தொகுப்பில்)
Wednesday, March 30, 2016
முந்தியெழு!
(உலகத்தாய்மொழி நாளன்று,
திருச்சியில் நிகழ்ந்த பைந்தமிழ் இயக்கவிழாவில், வழங்கப்பட்ட கவிதை)
வண்டமிழை ஏற்றிருந்தாய்,
வளஞ்சிறக்க வாழ்ந்திருந்தாய்...
கண்டவர்பின் சென்றதனால்
காலிடறி வீழ்ந்திட்டாய்!
களம்காண முந்தியெழு!
கால்கோளை இன்று நடு!
கொஞ்சுதமிழ் உண்டிருந்தாய்
குறள்நெறியைக் கொண்டிருந்தாய்,
வஞ்சகரால் வாழ்விழந்து
வழிமாறிச் செல்கின்றாய்!
வளவாழ்வைப் பந்தலிடு!
மாத்தமிழைக் கற்றிருந்தாய்,
மனைமாட்சி பெற்றிருந்தாய்.
தீத்திறத்தார் கூட்டுறவால்
திருவிழந்தே உருவிழந்தாய்!
தேரோட்ட முந்தியெழு!
தெருவெல்லாம் கோலமிடு!
முத்தமிழைக் கொண்டிருந்தாய்,
முனைமுகத்தில் நின்றிருந்தாய்,
வித்தென்று சோடைகளை
விதைத்தின்று கவல்கின்றாய்!
விதைவிதைக்க முந்தியெழு!
விளைநிலத்தைச் செப்பனிடு!
- கவிஞர் கொட்டப்பட்டு
சக்திவேலன்
திருச்சி
==============================Monday, March 28, 2016
கண் நுகர் கனி
கவிஞர் வசந்தராஜா
கைப்பேசி: 94865 79791
நீ புறக்கணித்தும்
சற்றும் கவலைப்படாமல்
வண்ணத்துப் பூச்சிகளாய்
ஆகிவிட்டன
என் பறக்கும் முத்தங்கள்!
-கவிஞர் வசந்தராஜா
சக்திதேவியின் நளினங்களே
நடனமென்பதால்,
அரங்கத்தின்
கதவைச்
சாற்றி
தோல்வியை
ஒப்புக்கொண்டு
சரணடைகிறான்
ஆடவந்த சிவபெருமான்.
-கவிஞர் வசந்தராஜா
நிலம் பார்த்து நடக்கின்ற
உன் முகத்தைப்
பார்த்துவிடும் ஆசையால்தான்,
பூமிக்கு இடம் பெயர்ந்து
நீர்நிலையில் கிடக்கிறது
நிலவு!
- -கவிஞர் வசந்தராஜா
Subscribe to:
Posts (Atom)







