Saturday, June 13, 2009

என்று தணியுமிந்த ஏக்கப் பெருமூச்சு?


வாழ்வாதாரமே
கேள்விக்குறியாய்
வளமான எதிர்காலமே
கானல்நீராய்
கனன்ற இதயத்துடனும்
குருதி சிந்தும்
கண்களுடனும்
புண்பட்ட ஈழத்தமிழரின்
புலம்பலும் பெருமூச்சும்
என்றுதான் தணியும்?

அடித்து நொறுக்கப்பட்டது
அகிம்சையைப் போதித்த
புத்தபிரான் திருக்கோயில்!
ஆதரவைத் தேடி ஈழத்து வீதிகளில்
அம்மகானே அலையும் நிலை!

சத்தியம் ஈழத்தில்
சாகடிக்கப்பட்டதால்
புத்தநெறிகளே அங்கே
புண்பட்டுப் போனது!

துடிதுடித்துச் சாவோரின்
துயரப் புலம்பலோடு
குடிதண்ணீர் குழாய்கள்கூட
குருதியாய் வடிக்கிறது!

வெறியாட்டம் ஆடுகின்ற
வேங்கைகளாய் சிங்களர்கள்
தறிகெட்டு அலைந்தபடி
தமிழ் இரத்தம் பருகுகின்றார்!

இறந்து கிடக்கும் ஈழத்தாய்களின்
இரத்தம் வடியும் மார்புகளில்
குழந்தைகள் வாய்வைத்து
குருதியைத்தான் பருகும் நிலை!

எங்கெங்கும் மரண ஓலம்
எதிரொலிக்கும் மயானபூமியில்
தங்கிடுமோ ஓருயிரேனும்
தமிழீழம் மலரும் நாளில்?


- கலைத்தாமரை ராஜேஸ்வரி
மதுரை-20.

No comments: