வணக்கம்!
ஆண்டுகள் பல கடந்தும். வரலாற்றில் அழியாத சோகச்சுவடுகளைப் பதித்துச் சென்றுள்ள ஆழிப்பேரலை’யின் அவலங்களைப்பற்றி, ஆண்டுதோறும் நாம் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறோம்.
நமது புலம்பல்கள் அந்த இயற்கையன்னையின் செவிகளுக்கு எட்டி, இனியொருகுறை அத்தகைய கொடுமையை அவள் நம்மீது பாய்ச்சாமலிருக்க வேண்டுமே எதிர்பார்ப்புக்களோடு!
இதோ, வரும் 26 அன்று சுனாமிநினைவு நாள் வருகிறது! சுனாமி பற்றி, எங்களது ‘தமிழ்நாட்டுக் குறுஞ்செய்திக் கவிஞர்கள் தம் படைப்புகளை இங்கே வழங்குகிறார்கள்.
- கிரிஜா மணாளான்
Editor/www.smspoets-tamil.blogspot.com
===========================================
சுனாமி !
=======
வலைவீசி
மீன்களைப் பிடித்தனர்
மக்கள்,
அலைவீசி
மக்களைப் பிடித்தது
சுனாமி!
கும்பகோணத் தீ
குழந்தைகளைத் தின்றது,
சுனாமியோ
சகலரையும் கொன்றது!
கடல் வற்றினாலும்
காயம் ஆறாது!
- பொன்.குமார், சேலம் (தமிழ்நாடு)
=================================
சுனாமி!
இந்தக்கோபம்
இனியும் வேண்டாம்!
இன்னொருமுறை வந்தால்,
உடைந்த இதயமெல்லாமே
நொறுங்கிவிடும்!
கண்ணீரில் வரைந்த
கடல் ஓவியம்......சுனாமி!
காலச்சக்கரத்தில்
செல்லரித்துபோனாலும்,
நெஞ்சத்தை அரித்துக்கொண்டே
இருக்கும் எப்போதும்!
- வி. சிவசங்கர், கள்ளக்குறிச்சி
(தமிழ்நாடு)
==============================
புகைப்படத்தில்
அழவைக்கிறது,
சுனாமியில் இறந்த
குழந்தை!
- வைகறை
=======================
ஓயாத சோக அலைகளாய்
எங்கள் கண்ணீரில்
இன்னும் கரிகிறது
கடலின் உப்பு!
- ஜவகர், நாகப்படினம்
(தமிழ்நாடு)
======================
எமனின் பினாமியாய்
சுனாமி!
உயிர், உடமை, சொந்தங்களை
சுருட்டிக்கொள்ள!
கடலில் மட்டுமா சுனாமி,
காவிரி, பாலாறு,
முல்லைப்பெரியாறிலும்
சுனாமி!
- வைகைத்தென்றல், மதுரை.
(தமிழ்நாடு)
=======================
முதலையுண்ட பாலகனை
உயிருடன் மீட்ட சுந்தரர்
எப்போது வருவார்…..?
பிள்ளைகளை சுனாமியில்
இழந்த
பெற்றோர்களின் ஏக்கம்!
- முருக. வெள்ளியங்கிரி,
திருப்பூர் (தமிழ்நாடு)
---------------------------
கிழக்கு திசை தாக்கிய சுனாமி
நெஞ்சில் வடுவாக!
மேற்கு திசையில் இன்னொரு சுனாமி’யாக
முல்லைப்பெரியாறு அணை..
நெஞ்சில் ரணமாக!
- எஸ். ராஜ்குமார், திருச்சி
(தமிழ்நாடு)
--------------------------
அப்போதே நினைத்தேன்,
நீ அழகு ஆழியல்ல,
அசுரப் பேய்தான் என்று!
உன் கோரக் கொப்பளிப்பில்
கொடுமையதை என்சொல்வேன்!
- மு. வேலாயுதம்,
டால்மியாபுரம்(தமிழ்நாடு)
============================
மீன்களின் பசிக்கு உயிர்கள் வேண்டி,
கடலன்னை
கரையை நோக்கி வீசிய வலை…
ஆழிப்பேரலை!
- க. இளையராஜ, சாத்துக்கூடல்
(தமிழ்நாடு)
---------------------------
கப்பலின் ஊஞ்சலாய்,
உப்புதரும் அமுதசுரபியாய்
காலமெல்லாம் இருக்கின்றாய்,..
தப்பு என்ன செய்தோம் நாங்கள்?
கடல் அன்னையே!
இப்புவியை அழிக்க வந்தாய்!
- கிரிஜா மணாளன்,
திருச்சி (தமிழ்நாடு)
-----------------------------
பிஞ்சு மழலைகளின்
பிணங்களை மடியில் ஏந்தி,
நெஞ்சு வெடித்துப் புலம்பும்
தாய்மார்கள்!
இரக்கமற்ற சுனாமியே!
மலையளவில் அலைகள்
மயானமாக்கியபோது,
உடமைப் பொருட்களை
பலிகொண்டதுதான் வேதனை!
இயற்கைகொண்ட
சில நொடி கோபம்,
உருவாக்கின நம்மில்
ஆறாத ரணங்கள்!
- கு. லட்சுமணன்,
புதுப்பட்டினம்.
தமிழ்நாடு.
====================
எங்கள் மனதை அள்ளவேண்டியவர்கள்
இங்கே
மணலை அள்ளுகிறார்கள்!
எங்கள் நல்வாழ்வை விரியச்செய்ய
வேண்டியவர்கள்
இருப்பதையும் சுருட்டுகிறார்கள்!
அள்ளுவதையும்
சுருட்டுவதையும்
அவர்களுக்கு சொல்லித்தந்த
ஆசிரியனா நீ
சுனாமி?
- கிரிஜா மணாளன்
-------------------------
சிங்கப்பூர் நண்பர் கவிஞர், சிங்கை தமிழ்ச்செல்வம் அவர்களின்
“கீழைநாட்டுக் கவிதை மஞ்சரி’ கவிதைத்தொகுப்பில், சுனாமி
பற்றி உலகளாவிய கவிஞர்கள் எழுதியுள்ள கவிதைகளில்
நான் ரசித்த வரிகள் இவை!
-------------------------------------
தீயிடம் உடலைக் கொடுத்து
தீர்ந்துபோன சாம்பலைக் கொடுப்பதனால்,
தீராப்பசியோ உனக்கு?
திரவத்தால் விழுங்கிவிட்டாய்!
- அ.நிஜாம்
--------------------------
பிஞ்சு மழலைகள்
பெற்றவள் மடியில் கிடக்க,
நெஞ்சம் வெடித்து உகுத்த கண்ணீர்
கொஞ்சமோ, கொடுங்கடலே?
- வ. சிங்காரவேலு.
---------------------------
கரம்கொட்டும் கவிதைக்குக்
கருவான ஆழி
கரைகடந்து பல லட்சம்
உயிர் குடித்த தந்தோ!
உரம்கொண்ட கடற்பசிக்கு
கடலோர மக்கல்
உயிர்ப்பறித்த சுனாமியின் தாய்,
உவர்க்கடலைப் பாடோம்!
- மு. சிங்காரவேலு.
-----------------------
நீரில் உருவெடுத்தாய் நிலத்தை நிலைகுலைத்தாய்!
பாரில் உன்செயலைப் பார்த்தோர் பரிதவித்தார்!
சீறி எழுந்தாயே, சீற்றம் மிகுந்தாயோ?
வீரியக் கடல்லலையே, வேதனை விளைத்தாயே!
செ. கதிரவன்
----------------------------
மீன்களுக்கு வலைவீசிய பலர்
கடல் வீசிய மாயவலையில்
தடம் தெரியாமல் மாண்டனர்!
ஓ சுந்தரரே!
இந்த அவல ஓலம்
உன் செவியில் படவில்லையோ?
அரக்க முதலை
விழுங்கிய உயிர்களை
மீட்க மாட்டாயோ?
- தே.பிரபாவதி
-------------------------
பிஞ்சு மழலைகள்
பெற்ரவள் மடிமுன் கிடந்தபோது
நெஞ்சைப் பற்றியெறிந்தது ஏன்?
பணக்குவியலையே
பார்க்காதவர்களைப்
பிணக்குவியலாக்கி விட்டாயே!
- வ. சிங்காரவேலு.
---------------------------
வாழ்வளித்த கடல்
வாங்கிய காவு ஏனோ?
பிள்லையிழந்த பித்தில்
தாயன்பின் கதறல்!
பொட்டிழந்த கோலத்தில்
மகளிரின் ஓலம்!
தாய்தந்தை பிணமாகிப்போக
தனிமைச் சிறையில் பிஞ்சுகள்!
- தைனீஸ்
----------------------------
பாவங்கள் மலிவதைப்
பார்க்கவிரும்பாத சீற்றமோ?
ஏன் தாயே?
இவ்வளவு நாட்கள்.....
உன்னில் வாழும் உயிர்களால்
உவப்புடன் எம் பசியாற்றினாய்!
உன் பசிக்கு இன்று
உண்வாய் நாங்களா?
- மு. ஜோதிலட்சுமி கார்த்திக்
திருச்சி, தமிழ்நாடு.
=================================
கடலும் பெண்ணும் ஒன்றுதான்,
ஆசை அலைகளைக்
கட்டுப்படுத்திக்கொள்வதிலும்,
கரைகடந்த கோபத்தில்
நிலைகடந்து கொப்பளிப்பதிலும்!
பட்டினிப் பசி தீர்த்து
குழந்தைகளாகிய எம்மை
பராமரிப்பதிலும்,
நீ ஒரு பாசமுள்ள அன்னை!
அதனால்தான் என்னவோ....
எதிர்காலத்தில் நாங்கள்
வறுமையில் சீரழிந்து
வாடிப்போகாமல்,
‘துலாபார நாயகி’யாய் வந்து
தூக்கிப்போனாயோ உயிர்களையெல்லாம்!
- ச. வளர்மதி, ஈரோடு
(தமிழ்நாடு)
==================================
ஆறாத காயம் தந்த ஆழிப்பேரலையே.......
தீராத அந்தவலி இன்னும் மாறலையே....!
ஆண்டுகள் உருண்டோடி ஆயிரம் ஆனாலும்..
இன்று நடந்ததாய் நம்முன் நிழலாடும்!
நீ கொண்டுசென்ற உயிர்களைக்
காணாமல் துடித்ததே ஊர் ஜனம்..
கண்டுவர தூதுவிட்டு கண்ணீர்க்குளம் கட்டி,
கரையிலே நிற்கிறதே தினம் தினம்..!
பல்லாயிரம் உயிர்களைக் குடித்தது உன் சினம்...
அதனால் குவிந்ததோ மலைஎன பிணம், பிணம்....!
திட்டம்போட்டு நீ பார்த்திருந்தாய்…உயிர்களை
திரட்டிச் செல்ல நீ காத்திருந்தாய்..
உறங்கும் வேளையிலே ஊருக்குள் ஏன் புகுந்தாய்?
கண்ணிமைக்கும் நேரத்திலே கயவனாய் ஏன் வந்தாய்?
பால்குடித்து உறங்கிய குழந்தையின்
பால்முகத்தைக் காணாமல்,
தாய் கிடந்து தவிக்கின்றாள்
தாளாத வேதனையால் !
தரைமீனாய் துடிக்கின்றாள்!
பச்சைக் குழந்தை ஒன்று
எச்சில் முத்தமிட தாய்முகத்தைத் தேடுது....
காணாத ஏக்கத்திலே உயிர்வற்றி வாடுது.....
கணவனை இழந்த மனைவி கதற,
மனைவியை இழந்த கணவன் பதற,
உடல்களைத் தேடி உறவுகள் சிதற,
நீமட்டும் அமைதியாய் அடங்க,
கண்ணீர் கூக்குரல் ஊரெங்கும் தொடங்க,
உயிரையும், உடமையும் உனதாக்கிக்கொண்டாய்.
இதில்என்ன இன்பம்நீ அன்று கண்டாய்?
கடல்காண வரும்போதெல்லாம் இதயம் திட்டித் தீர்க்கிறது.
அந்த நாளை நினைத்தால் மட்டும்
கண்கள் குருதியை வார்க்கிறது.
அறிவியல்கூட உன்னிடம் தோற்றது..
அன்பான உறவுகளை நாங்கள்
எப்போதுதான் மீட்பது?
- கு. தமயந்தி, கள்ளக்குறிச்சி
(தமிழ்நாடு)
==========================================
Friday, December 23, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment