Wednesday, December 28, 2011
ஆழிப்பேரலையே.......!
சுனாமி !
===========
ஆறாத காயம் தந்த ஆழிப்பேரலையே.......
தீராத அந்தவலி இன்னும் மாறலையே....!
ஆண்டுகள் உருண்டோடி ஆயிரம் ஆனாலும்..
இன்று நடந்ததாய் நம்முன் நிழலாடும்!
நீ கொண்டுசென்ற உயிர்களைக்
காணாமல் துடித்ததே ஊர் ஜனம்..
கண்டுவர தூதுவிட்டு கண்ணீர்க்குளம் கட்டி,
கரையிலே நிற்கிறதே தினம் தினம்..!
பல்லாயிரம் உயிர்களைக் குடித்தது உன் சினம்...
அதனால் குவிந்ததோ மலைஎன பிணம், பிணம்....!
திட்டம்போட்டு நீ பார்த்திருந்தாய்…உயிர்களை
திரட்டிச் செல்ல நீ காத்திருந்தாய்..
உறங்கும் வேளையிலே ஊருக்குள் ஏன் புகுந்தாய்?
கண்ணிமைக்கும் நேரத்திலே கயவனாய் ஏன் வந்தாய்?
பால்குடித்து உறங்கிய குழந்தையின்
பால்முகத்தைக் காணாமல்,
தாய் கிடந்து தவிக்கின்றாள்
தாளாத வேதனையால் !
தரைமீனாய் துடிக்கின்றாள்!
பச்சைக் குழந்தை ஒன்று
எச்சில் முத்தமிட தாய்முகத்தைத் தேடுது....
காணாத ஏக்கத்திலே உயிர்வற்றி வாடுது.....
கணவனை இழந்த மனைவி கதற,
மனைவியை இழந்த கணவன் பதற,
உடல்களைத் தேடி உறவுகள் சிதற,
நீமட்டும் அமைதியாய் அடங்க,
கண்ணீர் கூக்குரல் ஊரெங்கும் தொடங்க,
உயிரையும், உடமையும் உனதாக்கிக்கொண்டாய்.
இதில்என்ன இன்பம்நீ அன்று கண்டாய்?
கடல்காண வரும்போதெல்லாம் இதயம் திட்டித் தீர்க்கிறது.
அந்த நாளை நினைத்தால் மட்டும்
கண்கள் குருதியை வார்க்கிறது.
அறிவியல்கூட உன்னிடம் தோற்றது..
அன்பான உறவுகளை நாங்கள்
எப்போதுதான் மீட்பது?
- கு. தமயந்தி, கள்ளக்குறிச்சி
(தமிழ்நாடு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment