Friday, March 27, 2009

கோபங்கள்!





கிள்ளிக் கிள்ளி எறிகிறேன்
கொழுந்துகளை
மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றன விரைவில்.
வேரறுக்கவும் முடியவில்லை
வெட்டியெறியவும் முடியவில்லை...
உரமாக என்னை
சிறுகச் சிறுக விழுங்குகின்றன
என் கோபங்கள்!

- தே. ரம்யா
கொட்டக்குளம் (திருவண்ணாமலை)
தமிழ்நாடு.

Thursday, March 26, 2009

நாட்காட்டி!









தினமும் மகிழ்ச்சியாக
நாட்காட்டியின்
தாளைக் கிழிக்கிறேன்..
நமக்கும் பூமிக்குமுள்ள
தொடர்பு
குறைவது அறியாமல்.


- பரவை பாரதி
பரவைக்கோட்டை
தமிழ்நாடு

Tuesday, March 24, 2009


மனிதனே! மனிதநேயம் காக்க
உனக்கேன் தயக்கம்?
மறந்து, மறைந்துபோகும்
மனிதநேயம் மலர,
உனக்குள் வளரட்டும்
நல்வழக்கம்!
போதைப் பொருளில்
உனக்கேன் மயக்கம்?
நீ விழித்தெழுந்து
தயக்கத்தை தகர்த்தெறி!
உன்னைக் கண்டு விழித்தெழும்
இந்த பூமி!


- தே. ரம்யா, கொட்டக்குளம்,
(திருவண்ணாமலை)தமிழ்நாடு.

Monday, March 23, 2009

அசோகமரம்!


வீரனைப் புதைத்த இடம்
விறைப்பாய் வளர்ந்தது
அசோக மரம்!


- கே.ஏ. ராமலிங்கம் (9940771501)
சிறுவந்தட்டு (விழுப்புரம்), தமிழ்நாடு.

Sunday, March 22, 2009

தீக்குச்சி!



எரிக்கப்படுவோம் என்றாலும்
விரைப்பாக முன்நிற்கும்
தீக்குச்சி!


- ராமலிங்கம் (9940771501)

"உலக வானிலை தின"க் கவிதை.

வெப்பமாகும் பூமி
வேறுபடும் பருவநிலை
வேதனையில் மக்கள் நிலை!


-
கவிஞர் அ. கௌதமன் (9994368626)
திருச்சி, தமிழ்நாடு.

கருமேகம்!


யார் திட்டியது?
கருத்துக் கிடக்கிறது
மேகத்தின் முகம்!

- சி. கலைவாணி, அரியூர்.
(வேலூர் மாவடடம்) தமிழ்நாடு.

Friday, March 13, 2009

இறைவனின் வேடம்!


வரம் கேட்கும் நோக்கில்
ஆலயம் சென்றேன்..
என்னைக் கர்ணன் ஆக்கக்
காத்திருந்தார் வாயிலில் கடவுள்,
வேடம் தரித்து.


- கவிஞர் யாழி, (9976350636)
கோவை, தமிழ்நாடு.

Friday, March 6, 2009

ஆறாம் அறிவு?

ஐந்தறிவை மிஞ்சியது
ஆறறிவு,
பறவை விதைத்த மரத்தை
பகுத்தறிவற்று வெட்டினான்..
ஆறாம் அறிவை
அடகுவைத்து!

- தே.ரம்யா
கொட்டக்குளம், தமிழ்நாடு

"கவிஞர் கோவை யாழி"யின் கவிதைகள்

சமூகம் என்மீது உடுத்திய
ஆடைகளைக் கிழித்திட்டு
அம்மணமாகிறேன் நான்,
அழகாய் அன்பொழுகச் சிரிக்கும்
குழந்தையென
என் ஆன்மா.

----------------------------
புரிதலற்றவர்களால்
பரிகசிக்கப்படலாம்
வார்த்தைகளைப் புதைத்து
உணர்வுகளைப் பிரசவிக்கும்
நம் அன்பு.

-----------------------------
பாதுகாப்புக்கென வெட்டப்பட்ட
பதுங்கு குழிகள்..
பாரதம் கைவிட்டதால்
புதைகுழிகளாயின!

-----------------------------
காயம்பட்ட மூங்கிலில் நுழைந்து
வெளியேறுகிறது காற்று,
வாழ்வியல் சூத்திரங்களை
வாசித்துக் காட்டியபடி.

------------------------------

- கவிஞர் கோவை யாழி (9976350636)
கோவை, தமிழ்நாடு.

Monday, March 2, 2009

நானும்கூட...!


'நானும் ஒரு இயேசுதான்!'
பெருமைப்பட்டது
'பீனிக்ஸ் பறவை".


- 'கலைத்தாமரை' (ராஜேஸ்வரி)
மதுரை 625 020